Monday, July 2, 2012

எனக்கும் கொஞ்சம் எழுதத் தெரியும் 5

'சினம் கொளாமை'  ஒரு அடிமைத்தனமே!. கொடுமைகளைக் கண்டு சினம் கொள்பவன்தான் உண்மையான சிந்தனையாளன்.அவனே வலிமை மிகுந்த புரட்சியாளனாக மாறுகிறான். இதுதான் கடந்த கால வரலாறு.
அன்பின் வெளிப்பாடுதான் மனிதநேயம் . அந்த மனிதநேயமே மனித உரிமைக்கான களத்தை உருவாக்குகிறது. அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை அந்தக் களம்தான் தீர்மானிக்கிறது.
 கவிஞர் சி. பன்னீர்செல்வம் என்பவர் 'சினம் கொளாமை' என்ற தலைப்பில்  ஒரு கவிதை எழுதியிருந்தார். அநியாயம், அக்கிரமம் கண்டு நாம் சினம் கொள்ளாமல் இருப்பதே மனித 
அவலங்களுக்கெல்லாம் காரணம் என்று அவர் சாடுகிறார்.   

பிரபஞ்சத்தின் பெரும் சினமே
இறந்த கால வரலாறு 
காற்றின் சினம்
சூறாவளியும் புயலும் 
கடலின் சினம் 
சுனாமிகள் 
பூமியின் சினம் 
பூகம்பம் எரிமலைகள் 
அறத்தின் எதிரொலி 
மனிதனின் கோபம் 
மனிதனின் 
சினமுறாத பூமியில் 
புதிய தர்மங்கள் சாத்தியமா?
கொலைகார தேசத்தின்
குரூர அரக்கனின் வெற்றியில்
மகிழ்ந்தாடும்
மனநோயாளிகளைப் பார்த்து
சினம் கொளாதிருக்க முடியுமோ ?
தேசத்தைக் கொள்ளையடிப்பவனிடம்
சினமுறாதிருத்தல் சாத்தியமா
மான்புடையவர்க்கு ?
கொலை கொள்ளை கற்பழிப்பும்
சாதிமத இன ஒடுக்கல்களும்
பசி வறுமை கண்ணீரும்
பெருக்கெடுத்தோடும் பூமியில்
சினம் கொளாமை
பேரவலம் அன்றோ !

பிறப்பால் மனிதரிடையே உயர்வு தாழ்வு கற்ப்பிக்கப் பட்டதை கண்டு  தந்தை பெரியார் சினம் கொண்டதால்தான், அவர் மதங்களை எதிர்த்தார்; கடவுளை மறுத்தார்; சமூக விடுதலைப் போரை நடத்தினார்.
இந்தி மொழியைத்  திணித்து தமிழ் மொழி அழிப்புக்கு வித்திட முயன்ற காங்கிரஸ் கட்சியின் மீது சினம் கொண்டதால்தான். தமிழ் மொழிப் பாதுகாப்புப் போராட்டத்தை பேரறிஞர் அண்ணா முன்னெடுத்தார். மொழி விடுதலைப் போரை நடத்தினார்.
இனத்தின் பூர்விக அடையாளம் அழிக்கபடுவதைக் கண்டு மாவீரன் பிரபாகரன் சினம் கொண்டதால்தான் 'எமக்கு எம் மண் வேண்டும்' என்று  சிங்கள அடக்குமுறையை எதிர்த்து மண் விடுதலைக்காக போராடினார். அதுவே   ஈழ விடுதலைப் போராக வெடித்தது  
சமுதாயக் கொடுமைகளைக் கண்டு சினம் கொண்டு பாடியவர்கள் மக்கள் கவிஞர் பாரதியார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பொதுவுடைமைக் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். அதனால்தான் அவர்களின் கவிதைகள் இன்றும்    பேசப்படுகின்றன; அவர்களின் புகழ் நிலைத்து நிற்கிறது.  
இப்படி கொடுமைகள் கண்டு சினம் கொண்டவர்களை, குறிப்பாக சினம் கொண்ட தமிழர்களை  விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆனால், சினம் கொள்ளாமல் அடிமைகளாய் இருக்கிற தமிழர்கள்தாம் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கிறார்கள்  என்பதுதான் கொடுமை.
தன்மான உணர்வு விதைக்கப்பட்டு வளர்க்கப்பட்ட பூமியில் அமைச்சர்களெல்லாம் அடிமைகளைப் போல முதலமைச்சரின் காலை நோக்கியும்,'காரை' நோக்கியும் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்குகிறார்கள்.
தமிழைப் பேசி, தமிழரின் வாக்குகளைப் பெற்று தமிழ் நாட்டை ஆளும் அதிகாரத்தை பெற்றவர்கள், அதே தமிழுக்கு எதிராக செயல்படும்போது, தமிழ்ப்பண்பாட்டை சிதைக்கும்போது தட்டிக் கேட்க தமிழர்கள் தயங்குவது அடிமைத்தனத்தின் வெளிப்பாடுதானே!
அரசியலில் மட்டுமல்லாமல் கல்வி, மருத்துவம், நீதித்துறை, நிர்வாகத்துறை என்று எல்லாவற்றிலும் இன்று தகுதியின்மையும், தரமின்மையும் ஒரு புறம் பெருகி வருகிறது; நேர்மையற்ற  தன்மைகளும்  நியாயமற்ற போக்குகளும் பரவி வருகின்றன.  ஆனால் இது பற்றியெல்லாம் சினம் கொள்ள யாரும் இல்லை என்பதுதான் வேதனை. சினம் கொள்வது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்திக் கொள்கிற சிலர்  தங்களுக்கு கிடைக்கும் ஆதாயத்தை கருதியே சினம் கொள்ளும் திசையை தீர்மானித்துக் கொள்கிறார்கள். மக்களாட்சியின் நான்காம் தூண் என்று கருதப்படுகிற  ஊடகங்கள் கூட வேண்டிவர்களிடம் சினம் கொள்வதில்லை. வேண்டாதவர்களிடம் அளவுக்கு அதிகமாகவே சினம் கொள்கிறார்கள். வாழ்க்கையே வணிகமயம் ஆகிப்போனது. மனிதர்கள் அடிமைகளாகவே இருக்க விரும்புகிறார்கள். அதனால் அவர்கள் எதன்  மீதும் எவர் மீதும் சினம் கொள்ள துணிவதில்லை.
,தமிழ் ஊடகங்களும் அரசியல் தலைவர்களும் கொடுமைகளை கண்டிப்பதில்  தங்களுக்கென்று தனித்தனி அளவுகோள்களை வைத்திருகிறார்கள். அதன்படி திமுக தலைவர் கலைஞர் மு. கருணாநிதி கொட்டாவி விட்டாலும், ஏப்பம் விட்டாலும் அப்படி விட்டது தவறு என்றோ, விட்டமுறை சரியில்லை என்றோ செய்தியும் செய்திக்கட்டுரையும் வெளியிடுவார்கள். அவர் கொட்டாவி விடுவது கபட நாடகம் என்று ஒருவர் நெடுங்கட்டுரை எழுதுவார். இன்னொருவர் என்னைப்போல் நேர்மையாக ஏப்பம் விட கலைஞருக்குத் தெரியாது என்று ' money ' அருவி தேடி  இன்னொருவர் நேர்முகம் தருவார். இன்னும் பலருக்கு   கலைஞரையும் கலைஞர் குடும்பத்தையும் பார்த்துக் குரைத்தால்தான் விளம்பரம் கிடைக்கும். ஆனால் தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்ப் பண்பாட்டுக்கும் ஜெயலலிதாவால் என்ன கேடு வந்தாலும் எல்லாவறையும் பொத்திக் கொண்டு அமைதியாகி விடுகிறார்கள். அனைத்தையும் பார்த்துக் கொண்டு நம் தமிழினம் உறங்கிக் கொண்டிருக்கிறது. தமிழினம் விழிப்பது எப்போது?
  
      

Thursday, February 2, 2012

எனக்கும் கொஞ்சம் எழுதத் தெரியும் 4

ஆதிக்கவெறி  துணிவு ஆகுமா? - சமீரா மீரான்
2012 , பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிகழ்ந்தவை பெரும் விவாதத்துக்கும்  விமர்சனத்துக்கும்  உள்ளாயின. விஜயகாந்த் கை நீட்டி பேசிய விதத்தைதான் பலரும் குறை கூறினார்களே தவிர, ஜெயலலிதா பேசிய விதம் சரியா?  என்று வெகு சிலர்தான் வினா எழுப்பினர். விஜய காந்தை விட நீண்ட அரசியல் அனுபவம் உள்ள  ஜெயலலிதா அன்று பேசியது  அரசியல்  நாகரித்துக்கு உகந்ததாக இல்லை. முகநூலில் பதிவர் ஒருவர் எழுதியிருந்தது நம்மை வெகுவாக சிந்திக்க வைத்தது. 
‘மாற்றம் ஒன்றே மாறாதது என்ற மாமேதை மார்க்ஸின் தத்துவமே அதிர்ச்சிக்குள்ளாகும், ஜெ.வின் அரசியல் நடவடிக்கைகளைப் பார்த்து!
தன்னை அரசியலுக்குக் கொண்டு வந்த எம்.ஜி.ஆரை ‘செயல்படமுடியாத முதல்வர்’ என்று பிரதமர் ராஜீவ்காந்திக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் ஜெ.
நாவலர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட அ.தி.மு.க தலைவர்களை ‘உதிர்ந்த ரோமம்’ என்று வர்ணித்து தனது தலைமைப் பண்பைக் காட்டினார்.
இரவு 10 மணிக்குத் தொடர்புகொள்ளமுடியவில்லை என்பதால், ‘இவரெல்லாம் பிரதமரா?’ என்று ராஜீவ்காந்தியை விமர்சித்தார்.
எம்.ஜி.ஆருக்கு ‘மோரில் விஷம் வைத்துக் கொடுத்தார்’ என்று ஜானகி அம்மாள் மீது குற்றம்சாட்டினார்.
தமிழகத்திலிருந்து செல்லும் பேருந்துகளில் நடந்த கொள்ளைகளுக்கு பிரதமர் நரசிம்மராவ்தான் தூண்டுதல் என்று குற்றம்சாட்டினார்.
ஆளுநர் சென்னாரெட்டி தன்னிடம் ‘தவறாக நடந்து கொள்ள முயன்றார்’ என்று பழிசுமத்தினார்.
அத்வானிக்கு ‘செலக்டிவ் அம்னீஷியா’ நோய் என்றார்.
பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான காவிரி ஆணையத்தை ‘பல் இல்லாத ஆணையம்’ என்றார்.
சோனியா காந்தியை ‘பதிபக்தி இல்லாதவர்’ என்றார்.
காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியத்தை ‘காலி டப்பா’ என்றார்.
பா.ம.க நிறுவனர் ராமதாஸை ‘பயந்தாங்கொள்ளி’ என்றார்.
கம்யூனிஸ்ட்டுகளை ‘உண்டியல் குலுக்குபவர்கள்’ என்றும், மேற்குவங்கத்தில் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றி மோசடி செய்ததால்தான் தொடர்ந்து வெற்றிபெற்றார்கள் என்றும் சொன்னார்.
விஜயகாந்த்தை ஏற்கனவே ‘குடிகாரர்’ என்ற பொருள்பட வர்ணித்தவர் இப்போது மீண்டும், ‘தகுதி இல்லாதவர்’, ‘கீழ்த்தரமானவர்’ என்றும் விமர்சித்துள்ளார்.
தனக்கும் தன் கட்சிக்கும் துணை நின்ற அரசியல் தலைவர்களை விமர்சிப்பதிலிருந்து ஜெ. இதுவரை மாறவில்லை. மாற்றத்தை எதிர்பார்த்து அவருடன் கூட்டணி சேர்ந்தவர்களும் வாக்களித்தவர்களும் யோசிக்க வேண்டிய விஷயம் இது.
தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களான கலைஞர் மு. கருணாநிதி, பேராசிரியர் க. அன்பழகன் போன்றாரைப் பற்றி ஜெயலலிதா சொன்னவற்றை தன் பட்டியலில் இந்தப் பதிவர் சேர்க்கவில்லை. அதையும் சேர்த்தால் ஜெயலலிதாவின் அடாவடி அரசியல் குறித்து ஒரு பெரிய புத்தகமே தயாரித்து விடலாம்.
 நியாயங்களை காயப்படுத்தாதே !  அந்த காயங்களை நியாயப்படுத்தாதே!!.சொன்னவர் அறிஞர் அண்ணா அவர்கள். ஆனால்,  அந்த அண்ணாவின் பெயரை கொண்ட கட்சியை நடத்தும் ஜெயலலிதாவோ நீதிமன்ற கண்டிப்புக்கு அதிகமாக ஆளான முதல்வர் என்ற பெருமையை பெற்றுள்ளார் . நீதியையும் ,நியாயத்தையும் குழி தோண்டி புதைப்பதே அவருடைய கொள்கையாக கொண்டுள்ளார். தனது பேச்சால், செயலால் யார் காயப்பட்டாலும், எத்தனை பேர் துன்பப்பட்டாலும் அது பற்றி கொஞ்சமும் கவலைபடாத ஒருவர் ஜெயலலிதா. பல தருணங்களில் மனிதநேயம் மறந்து பேசுகிற, செயல்படுகிற ஜெயலலிதாவை சிலர் துணிச்சல்காரர் என்று போற்றுகின்றனர். ஆதிக்க வெறியை  துணிச்சல் என்று கூறினால், மகாத்மா காந்தியை  கொன்ற கோட்சேவையும்  துணிச்சல்காரன் என்று சொல்லலாமே    

Wednesday, January 19, 2011

எனக்கும் கொஞ்சம் எழுதத் தெரியும்.( 3 )

அடக்குமுறைக்கு அடங்க மறுப்போம் - சமீரா மீரான்

அடக்குமுறைக்கு அடங்க மறுப்போம்
மும்பையில் மக்கள் நலப் பணியாற்றும் தம்பி ஒருவர், பெரியார் இயக்கத்தைச் சேர்ந்தவர்,  என்னிடம் ஒரு விளக்கம் கேட்டார்.'அய்யா, நான் எங்கள் சமுதாய மக்கள் இணைந்து நடத்தும் ஒரு அமைப்பின் சார்பாகவும் மக்கள் நலப் பணிகளை செய்து வருவது உங்களுக்குத் தெரியும். சில நண்பர்கள் சாதி ஒழிப்பை வலியுறுத்திய பெரியாரின் இயக்கத்தைச் சேர்ந்த நீங்கள் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த அமைப்பில் இணைந்து செயல் படலாமா? என்று கேட்கிறார்கள். எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. ' என்றார். சாதியின் பெயரால் இயங்கும் எந்த ஒரு அமைப் பிலும் அவர் உறுப்பினாராக இல்லை.  அவர் குறிப்பிட்டது தமிழ் இலக்கிய உலகின் தலைமைப் புலவன்  பெயரில் அமைந்த அமைப்பு. பிறகு ஏன் கவலைப்பட வேண்டும் என்றால்  ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்கள்தாம் அந்த அமைப்பில்  உறுப்பினர்களாக இருக்கிறார்களாம். அதனால் அந்த அமைப்பை ஒரு சாதி அமைப்பாகவே மற்றவர்கள் பார்க்கிறார்களாம் . மும்பையில் பல தமிழ் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களின் பெரும்பான்மை ஆதிக்கத்தில்தான் இயங்கி வருகின்றன. இதற்க்குக் காரணம், உறவினர்கள், ஒரே ஊர்க்காரர்கள், பக்கத்து  ஊர்க்காரர்கள் உதவியுடன்  மும்பைக்கு வருகிறார்கள். பிறகு  அதே அடிப்படையில் பொது பிரச்சினைகளில் ஒன்று கூடுகிறவர்கள் பெரும்பாலும் ஒரே சமுதாயத்தைச்  சேர்ந்தவர்களாகவும்  அமைந்து விடுகிறார்கள். ஒவ்வொரு குறிப்பிட்ட சாதிக்காரர்களை மட்டும் உறுப்பினர்களாகக் கொண்டு சாதிகளின் பெயரால்  சங்கங்கள் பல மும்பையில் இருக்கின்றன. பள்ளி, கல்லூரி, பணியிடங்களில் சாதிபெயரையும் சேர்த்து எழுதுவதை பெரும்பாலான தமிழர்கள்கடைப்பிடித்து வருகிறார்கள்.  அதனால் சாதிப் பெயர்கள் உச்சரிக்கப் படுவதும்,  சாதியின் பெயரால் தமிழர்கள் அடையாளப்படுவதும் மும்பையில்  மிகச்  சாதரணமாக நிகழக் கூடியவை.மும்பையில் சில தமிழர்களுக்கு ஒரு தனிப்பண்பு இருக்கிறது. அது என்ன வென்றால், தாங்களாக ஏதும் நல்லது செய்ய முன்வர மாட்டார்கள். நல்லது செய்ய யாரேனும் முன்வந்தால் அவர்களிடம் ஏதேனும் குற்றம் கண்டு விமர்சனம் செய்வார்கள்.   அப்படிப் பட்டவர்களை  அலட்சியம் செய்வதுதான் சரியான வழி  என்றாலும்,  தன்னுடைய  மனத்  தெளிவுக்காக அந்தத் தம்பி விளக்கம் கேட்டிருக்க வேண்டும்.'பெரியார் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய சமுதாய மக்களால்  நடத்தப் படும் அமைப்பிலும்  சேர்ந்து பணியாற்றலாமா?' என்பதுதான் அவர்களுடைய கேள்வி.'கடவுளை மறுத்த பெரியார், கோவில் அறங்காவலராக ஏன் இருந்தார்? கோவில் நுழைவுப் போராட்டத்தை ஏன் நடத்தினார்?; அனைவரும் அர்ச்சகராக வேண்டும் என்று ஏன் விரும்பினார்? ''சாதி மறுப்பை வலியுறுத்தும் இயக்கங்கள் இன்றும் சாதியின் பெயரால் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்பது ஏன்? இந்த வினாக்களுக் கான  விடைகளில் உள்ள நியாயம்தான் அந்தத் தம்பியின் வினாவுக்கு  விடை தேட எனக்கு உதவியது. சில செயல்களை மேலோட்டமாகப் பார்த்தால் அவை ஏற்றுக் கொண்ட கொள்கைக்கு முரணானவை போல் தோன்றும். ஆழ்ந்து சிந்தித்தால்தான் புரியும் அவை அந்தக் கொள்கை வழியில் இயக்கப் பணிகளுக்கு  வலுசேர்க்கும் செயல்கள் என்று.மக்களுக்கு நன்மை தரும் பணிகளை யார் செய்தாலும், யாருக்காக செய்தாலும், அவை  இன்னொரு மனிதனுக்கு தீங்கு விளைவிக்காதபணியாக இருக்குமானால் அதனைஏன் தடுக்க வேண்டும்? தடுக்க நினைக்க வேண்டும்?  அமைப்பு ரீதியான சட்ட விதிகளைக் கடைபிடிக்க வேண்டாமா என்றால், அது பற்றி அந்தந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்தாம் கவலைப்பட வேண்டும்.   மற்றவர்களோ  மக்களோ  அதுபற்றி ஏன்  கவலைப்படவேண்டும்.?.  ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைப்பதும் அவர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை  எதிர்ப்பதும்  பெரியரிக்கத்தாரின் அரும்பணிகளில் ஒன்று.அந்த ஒடுக்கப்பட்ட சமுதாயம் எந்தசமுதாயமாக இருந்தாலும், நாம்  பிறந்த சமுதாயமாகவே இருந்தாலும் அவர்களுக்காகவும் சேர்த்து குரல் கொடுப்பதும்,  உழைப்பதும் 
நம்முடைய கடமைதான்.இதில் எந்தத் தவறும் இல்லை.இதுதான் அந்தத் தம்பிக்கு நான் சொன்ன பதில். இந்த விளக்கம் அவருக்கு   எந்த அளவில் உதவியதோ தெரியாது. எனக்கு பெரும் உதவியாக அமைந்தது.
பொதுவாகவே திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்கள் சாதி சார்ந்து செயல்படுவதை இயக்கக் கொள்கையை அறிந்தவர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அப்படி ஒரு அவப் பெயர் வந்துவிடக் கூடாது என்பதாலேயே பெரியாரின் கொள்கைகளில் பற்று கொண் டவர்கள் பலர் தம் சாதியைச் சேர்ந்தவர்களின் நலனுக்காக பேசுவதையும் அவர்களு டைய தேவைகளுக்காக   துணை நிற்பதையும்  தவிர்த்து வருகின்றனர். இன்னும் சிலரோ தங்கள்  பிள்ளைகளின்  கல்விக் கூடங்களில் தங்களின் சாதியை பதிவு செய்வது கொள் கைக்கு விரோதமானது என்று கருதி அதனை  தவிர்த்து விடுகின்றனர்.
ஆழமாக சிந்தித்து பார்க்கும் பொது,  இத்தகைய அணுகுமுறை அறிவுப்பூர்வமானது அல்ல என்பதை நாம் உணரமுடியும்  . எந்த ஒரு சிக்கலையும்  பகுத்தறிவோடு அணுகும்போது தீர்வு சரியாகவே இருக்கும். பெரியாரின் சாதி மறுப்பும் , சாதி ஒழிப்பும் நமக்குள் ஏதும் ஏற்ற தாழ்வு இருக்கக் கூடாது என்பதற்காகத்தான். நம்மைவிட  மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணம் எவருக்கும் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான். எவருக்கும் நான் அடிமை இல்லை; எவரும் எனக்கு அடிமையில்லை என்பதை ஒவ்வொரு மனிதனும் உணரவேண்டும் என்பதற்காகத்தான். ஆனால், தம்மிடம் வளர்ந்த மனிதேய உணர்வை நம்மிடம் வளர்த்தவர் பெரியார்.  அந்த மனித நேய அடிப்படையில்  எந்த  மனிதனுக்காகவும்,   அவனுடைய நேர்மை யான தேவைக்காக நிச்சயம் நாம் துணை நிற்கவேண்டும். நாம் சாதியை விரும்பாவிட்டாலும் இந்த சமூகம், அரசாங்கம், சட்டம் அனைத்தும்  சாதியைக்கொண்டு நம்மை அடையாளம் காண் பதை தடுக்க முடியாது. எந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும், நம் குருதி உறவுகளின் சமுதா யமாக இருந்தாலும் சரி, அவர்களின் போராட்டத்தில் நியாயம் இருக்குமானால் அவர்களோடு இணைந்து போராடத் தயக்கம் தேவையில்லை என்பதே நம் தாழ்மையான கருத்து. இந்த இடத்தில் ஒன்றை நாம் மறந்து விடக்கூடாது. 'தம் இனத்துக்காரன் செய்தது குற்றம் என்பதை நன்கு அறிந்தும் ஒருவன் அவனை பாதுகாக்க முயல்வதுதான் மோசமான இனவெறி' என்பது  முகமது நபி (ஸல்) அவர்களின் அருள்மொழி என்று இணையப் பதிவு ஒன்றில் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். எவராக இருந்தாலும் தவறுக்கு துணை போகாமல், அவர்களுடைய நியாயமான உரிமைகளுக்காக நாம் துணை நிற்கவேண்டும். அந்த வகையில்தான் இந்த நாட்டில் தமிழர்களின் உரிமைகள் மறுக்கப் படும்போதும், இசுலாமியர்களுக்கு இன்னல்கள் ஏற்படுத்தப்பட்டு, அநீதி இழைக்கப்படும்போதும்,  பெரியாரின் பிள்ளையாக, தி. மு. கழகத்துக் காரனாக, எந்தவித தயக்கமும் இன்றி ஓங்கி குரல்  கொடுக்கும் விதமாக தொடர்ந்து எழுதி வருகிறேன். 
கல்விக் கூடங்களில் ,  பணியிடங்களில் நம் சாதியை பதிவு செய்யாமல் இருப்பதால்  நமக்கு கிடைக்க வேண்டிய அரசின் சலுகையை  நாம் இழக்கிறோம் என்பது மட்டுமல்ல,  அந்த இடம் ஒரு உயர்  வகுப்பைச் சேர்ந்தவருக்கு கிடைப்பதால், நம்முடைய வளர்ச்சிக்கு அதுவே தடையாகும். நூற்றாண்டு கால இடஒதுக்கீடு போராட்டம் அர்த்தமற்று போய்விடும்.
நம் சமுதாயக்   கட்டமைப்பும், அரசியல் சட்ட அமைப்பும் நம்மை, நம் சாதிப்பிரிவைக் கொண்டு அடையாளம் காணுகிற நிலை தொடரும்வரை, நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சாதியைக் கொண்டு நாம் அறியப்படுவதை தவிர்க்க முடியாது. குறிப்பாக, இடஒதுக்கீட்டு உரிமை பெற்றவர்கள் சாதிப் பெயரைத்  தெரிவிக்கத்  தயக்கம் காட்டக் கூடாது. அதே வேளையில் சாதியின் பெயரால், மதத்தின் பெயரால், நிகழும் இழிவுகளையும்,  அடக்குமுறைகளையும் எந்தக் காலத்திலும் நாம் அனுமதிக்கக் கூடாது.  உலகின் எந்த ஒரு  மனிதரிடமும்  அன்பு  காட்டும் நல்லெண்ணம்  மிக்க மனிதர்களாக நாம் வாழ்ந்தாலும்,  உலக மாந்தர்  அனைவருக்கும்  ஒரு குறிப்பிட்ட மொழி இருக்கிறது;  அனைவரும் ஒரு குறிப்பிட்ட மரபினத்தைச்  சேர்ந்தவர்களாக  இருக்கிறார்கள். அந்த வகையில் நாம் அனைவரும் மொழியால் தமிழர்கள், இனத்தால் திராவிடர்கள் என்ற உணர்வோடு ஒன்றுபட்டு வாழ்வோம். வாழ்க தமிழ்! வளர்க  திராவிடம்!!.