Monday, July 2, 2012

எனக்கும் கொஞ்சம் எழுதத் தெரியும் 5

'சினம் கொளாமை'  ஒரு அடிமைத்தனமே!. கொடுமைகளைக் கண்டு சினம் கொள்பவன்தான் உண்மையான சிந்தனையாளன்.அவனே வலிமை மிகுந்த புரட்சியாளனாக மாறுகிறான். இதுதான் கடந்த கால வரலாறு.
அன்பின் வெளிப்பாடுதான் மனிதநேயம் . அந்த மனிதநேயமே மனித உரிமைக்கான களத்தை உருவாக்குகிறது. அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை அந்தக் களம்தான் தீர்மானிக்கிறது.
 கவிஞர் சி. பன்னீர்செல்வம் என்பவர் 'சினம் கொளாமை' என்ற தலைப்பில்  ஒரு கவிதை எழுதியிருந்தார். அநியாயம், அக்கிரமம் கண்டு நாம் சினம் கொள்ளாமல் இருப்பதே மனித 
அவலங்களுக்கெல்லாம் காரணம் என்று அவர் சாடுகிறார்.   

பிரபஞ்சத்தின் பெரும் சினமே
இறந்த கால வரலாறு 
காற்றின் சினம்
சூறாவளியும் புயலும் 
கடலின் சினம் 
சுனாமிகள் 
பூமியின் சினம் 
பூகம்பம் எரிமலைகள் 
அறத்தின் எதிரொலி 
மனிதனின் கோபம் 
மனிதனின் 
சினமுறாத பூமியில் 
புதிய தர்மங்கள் சாத்தியமா?
கொலைகார தேசத்தின்
குரூர அரக்கனின் வெற்றியில்
மகிழ்ந்தாடும்
மனநோயாளிகளைப் பார்த்து
சினம் கொளாதிருக்க முடியுமோ ?
தேசத்தைக் கொள்ளையடிப்பவனிடம்
சினமுறாதிருத்தல் சாத்தியமா
மான்புடையவர்க்கு ?
கொலை கொள்ளை கற்பழிப்பும்
சாதிமத இன ஒடுக்கல்களும்
பசி வறுமை கண்ணீரும்
பெருக்கெடுத்தோடும் பூமியில்
சினம் கொளாமை
பேரவலம் அன்றோ !

பிறப்பால் மனிதரிடையே உயர்வு தாழ்வு கற்ப்பிக்கப் பட்டதை கண்டு  தந்தை பெரியார் சினம் கொண்டதால்தான், அவர் மதங்களை எதிர்த்தார்; கடவுளை மறுத்தார்; சமூக விடுதலைப் போரை நடத்தினார்.
இந்தி மொழியைத்  திணித்து தமிழ் மொழி அழிப்புக்கு வித்திட முயன்ற காங்கிரஸ் கட்சியின் மீது சினம் கொண்டதால்தான். தமிழ் மொழிப் பாதுகாப்புப் போராட்டத்தை பேரறிஞர் அண்ணா முன்னெடுத்தார். மொழி விடுதலைப் போரை நடத்தினார்.
இனத்தின் பூர்விக அடையாளம் அழிக்கபடுவதைக் கண்டு மாவீரன் பிரபாகரன் சினம் கொண்டதால்தான் 'எமக்கு எம் மண் வேண்டும்' என்று  சிங்கள அடக்குமுறையை எதிர்த்து மண் விடுதலைக்காக போராடினார். அதுவே   ஈழ விடுதலைப் போராக வெடித்தது  
சமுதாயக் கொடுமைகளைக் கண்டு சினம் கொண்டு பாடியவர்கள் மக்கள் கவிஞர் பாரதியார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பொதுவுடைமைக் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். அதனால்தான் அவர்களின் கவிதைகள் இன்றும்    பேசப்படுகின்றன; அவர்களின் புகழ் நிலைத்து நிற்கிறது.  
இப்படி கொடுமைகள் கண்டு சினம் கொண்டவர்களை, குறிப்பாக சினம் கொண்ட தமிழர்களை  விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆனால், சினம் கொள்ளாமல் அடிமைகளாய் இருக்கிற தமிழர்கள்தாம் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கிறார்கள்  என்பதுதான் கொடுமை.
தன்மான உணர்வு விதைக்கப்பட்டு வளர்க்கப்பட்ட பூமியில் அமைச்சர்களெல்லாம் அடிமைகளைப் போல முதலமைச்சரின் காலை நோக்கியும்,'காரை' நோக்கியும் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்குகிறார்கள்.
தமிழைப் பேசி, தமிழரின் வாக்குகளைப் பெற்று தமிழ் நாட்டை ஆளும் அதிகாரத்தை பெற்றவர்கள், அதே தமிழுக்கு எதிராக செயல்படும்போது, தமிழ்ப்பண்பாட்டை சிதைக்கும்போது தட்டிக் கேட்க தமிழர்கள் தயங்குவது அடிமைத்தனத்தின் வெளிப்பாடுதானே!
அரசியலில் மட்டுமல்லாமல் கல்வி, மருத்துவம், நீதித்துறை, நிர்வாகத்துறை என்று எல்லாவற்றிலும் இன்று தகுதியின்மையும், தரமின்மையும் ஒரு புறம் பெருகி வருகிறது; நேர்மையற்ற  தன்மைகளும்  நியாயமற்ற போக்குகளும் பரவி வருகின்றன.  ஆனால் இது பற்றியெல்லாம் சினம் கொள்ள யாரும் இல்லை என்பதுதான் வேதனை. சினம் கொள்வது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்திக் கொள்கிற சிலர்  தங்களுக்கு கிடைக்கும் ஆதாயத்தை கருதியே சினம் கொள்ளும் திசையை தீர்மானித்துக் கொள்கிறார்கள். மக்களாட்சியின் நான்காம் தூண் என்று கருதப்படுகிற  ஊடகங்கள் கூட வேண்டிவர்களிடம் சினம் கொள்வதில்லை. வேண்டாதவர்களிடம் அளவுக்கு அதிகமாகவே சினம் கொள்கிறார்கள். வாழ்க்கையே வணிகமயம் ஆகிப்போனது. மனிதர்கள் அடிமைகளாகவே இருக்க விரும்புகிறார்கள். அதனால் அவர்கள் எதன்  மீதும் எவர் மீதும் சினம் கொள்ள துணிவதில்லை.
,தமிழ் ஊடகங்களும் அரசியல் தலைவர்களும் கொடுமைகளை கண்டிப்பதில்  தங்களுக்கென்று தனித்தனி அளவுகோள்களை வைத்திருகிறார்கள். அதன்படி திமுக தலைவர் கலைஞர் மு. கருணாநிதி கொட்டாவி விட்டாலும், ஏப்பம் விட்டாலும் அப்படி விட்டது தவறு என்றோ, விட்டமுறை சரியில்லை என்றோ செய்தியும் செய்திக்கட்டுரையும் வெளியிடுவார்கள். அவர் கொட்டாவி விடுவது கபட நாடகம் என்று ஒருவர் நெடுங்கட்டுரை எழுதுவார். இன்னொருவர் என்னைப்போல் நேர்மையாக ஏப்பம் விட கலைஞருக்குத் தெரியாது என்று ' money ' அருவி தேடி  இன்னொருவர் நேர்முகம் தருவார். இன்னும் பலருக்கு   கலைஞரையும் கலைஞர் குடும்பத்தையும் பார்த்துக் குரைத்தால்தான் விளம்பரம் கிடைக்கும். ஆனால் தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்ப் பண்பாட்டுக்கும் ஜெயலலிதாவால் என்ன கேடு வந்தாலும் எல்லாவறையும் பொத்திக் கொண்டு அமைதியாகி விடுகிறார்கள். அனைத்தையும் பார்த்துக் கொண்டு நம் தமிழினம் உறங்கிக் கொண்டிருக்கிறது. தமிழினம் விழிப்பது எப்போது?
  
      

No comments:

Post a Comment