Sunday, August 17, 2014

எனக்கும் கொஞ்சம் எழுதத் தெரியும் 7

பின்நவீனத்துவம் என்றால் என்ன? 

வெகு நாட்களாக இலக்கியத்தில் ஒரு அய்யம். பலரைக் கேட்டும் பதில் சரியாக கிடைக்கவில்லை. சில நூல்களிலும் தேடிப் பார்த்தேன். விளக்கம் ஏதும் காணமுடியவில்லை. பிறகுதான் புரிந்தது என்னைப் போலவே பலரும் அதே சந்தேகத் தாகத்தோடு திரிகிறார்கள் என்று. வேறு ஒன்றுமில்லை. நவீனத்துவ இலக்கியங்கள் என்றால் என்ன என்பதை ஓரளவு (கண்டிப்பாக ஓரளவுதான் ) கல்லூரி காலத்திலேயே புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால்  இந்த பின் நவீனத்துவம், பின் நவீனத்துவம்  என்று சிலர் சொல்கிறார்களே; அப்படி என்றால் என்ன என்றுதான் இதுவரை எனக்கு விளங்கவில்லை. அண்மையில் ஒருவர் இணையத்தில் பின் நவீனத்துவம் குறித்து எழுதியிருந்ததை படித்த பிறகுதான் ஒரு ஆறுதல். பின் நவீனத்துவம் தெரியாத நீயெல்லாம் ஒரு இலக்கியவாதியா என்று யாரும் நம்மை கேட்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு வந்தது. நம்மைப் போலவே பின் நவீனத்துவம்  பற்றி தெரியாதவர்களின் எண்ணிக்கைதான் அதிகம் என்பதை புரிந்து கொண்டதால் மட்டுமன்று, பின் நவீனத்துவ இலக்கியவாதிகள் என்று தங்களை அறிமுகப் படுத்திக் கொள்கிறவர்களுக்கே அதற்கு விளக்கம் சொல்லத் தெரியாது என்ற உண்மையை புரிந்து கொண்டதாலும்தான்  அந்த நம்பிக்கை. இதோ இணையத்தில் நான் படித்த அந்தப் பதிவு

ஜிகர்தண்டா ஒரு பின்நவீனத்துவப் படம்என்று சாரு புகழாரம் சூட்டியதிலிருந்து மீண்டும் பின்நவீனத்துவம் இணையத்தில் கடுமையான விவாதங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.
பிரச்சினை என்னவென்றால் பின்நவீனத்துவம் என்றால் என்னவென்று புரியாமல் பேந்த பேந்த முழித்துக்கொண்டு பாதிபேரும், தாங்கள் புரிந்துகொண்ட பின்நவீனத்துவம் என்னவென்பதை விளக்க முடியாமல் மீதி பேருமாக வாழக்கூடிய பின்நவீனத்துவச் சூழலில் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு இணையத்தில் இலக்கியவாதிகள் ஒவ்வொருவராக என்ட்ரி கொடுக்க ஆரம்பித்தபோதே தமிழில் சிற்றிலக்கிய சமாச்சாரமாக இருந்த பின்நவீனத்துவம், வெகுஜன கலாச்சாரத்தின் கச்சாப்பொருளாக ஆகிவிட்டது. ஒரு படமோ, கதையோ, கட்டுரையோ பிடித்துவிட்டால் அதில் பின்நவீனத்துவ அம்சங்கள் இருப்பதாக போகிறபோக்கில் ஆள் ஆளுக்கு அடித்துவிட்டு போக ஆரம்பித்துவிட்டார்கள்.
ஜிகர்தண்டாவை பின்நவீனத்துவ திரைப்படம் என்று சாருவை அடியொற்றி சொல்லியிருக்கும் நண்பர் ஒருவர், பின்நவீனத்துவத்தை விளக்க முடியாது, உணரத்தான் முடியுமென்று ஒரு போடு போட்டிருக்கிறார். கடவுள் ரேஞ்சுக்கு ஆகிவிட்டது பின்நவீனத்துவம்.
பின்நவீனத்துவம் என்றால் என்னவென்று தெரியாது. ஆனால் எல்லோரும் பின்நவீனத்துவம் என்கிற வார்த்தையை சகட்டு மேனிக்கு பயன்படுத்துகிறார்கள். யாரையாவது விளக்கம் கேட்டால் நமட்டுச் சிரிப்பு சிரிக்கிறார்கள் அல்லதுதம்பி, அது தேவரகசியம்ரேஞ்சுக்கு பில்டப் கொடுக்கிறார்கள்.
அப்படியெனில் பின்நவீனத்துவம் என்பது அவ்ளோ பெரிய அப்பாடக்கரா என்று நினைத்துக் கொண்டு, அது என்னவென்ற தெளிவு இல்லாமலேயே கும்பலில் கோவிந்தாவாக பின்நவீனத்துவத்துக்கு ஜே போட்டாக வேண்டிய கட்டாயம் எல்லாருக்கும் ஏற்பட்டு விட்டது.
பின்நவீனத்துவத்தின் கோட்பாடு, தத்துவம், லொட்டு லொசுக்கையெல்லாம் விட்டுவிடுவோம். பின்நவீனத்துவம் என்பது ஒரு காலக்கட்டத்தின் சூழல். அதாவது கி.மு / கி.பி மாதிரி. அதிமுக ஆட்சிக்காலம் / திமுக ஆட்சிக்காலம் மாதிரி. அடிப்படையில் இந்த புரிதலை ஏற்படுத்திக் கொண்டால் போதும். அதாவது நவீனத்துவத்தை கி.மு. என்று எடுத்துக் கொண்டால் பின்நவீனத்துவத்தை கி.பி. என்று எடுத்துக் கொள்ளலாம். மொத்த மேட்டரே இவ்வளவுதான்.
மனுஷன் மாடர்ன் ஆன காலம் நவீனத்துவம்.
மாடர்ன் ஆன மனுஷன் மறுபடியும் மாடர்ன் அம்சங்களை கேள்விக்குள்ளாக்கி எல்லாத்தையும் கலைத்துப் போட்டு விளையாடுவது போஸ்ட் மாடர்ன், அதாவது பின்நவீனத்துவம். தட்ஸ் ஆல். ஆர்வமிருப்பவர்கள் மேலதிகமாக பின்நவீனத்துவத்தின் கோட்பாடு, கோட்பாட்டாளர்கள், பண்பு என்றெல்லாம் வாசித்துக் கொள்ளலாம். ஆர்வமில்லாதவர்கள் அப்படியொரு மேட்டரைப் பற்றி கவலைப்பட வேண்டியதேயில்லை. நமக்கு கலைஞர் ஆண்டாலும், ஜெ. ஆண்டாலும் ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா என்ன. மரக்கட்டை மாதிரிதானே வாழ்கிறோம். பின்நவீனத்துவ விஷயத்திலும் அப்படியே இருந்துவிட்டுப் போவோம். இதுவும்கூட பின்நவீனத்துவத்தின் ஒரு பண்புதான்.
இனிமேல் நம்மூர் இலக்கியவாதிகளிடமோ / அறிவுஜீவிகளிடமோ பின்நவீனத்துவம் பற்றி கேட்காதீர்கள். பெரும்பாலும் அவர்களுக்கு தெரிந்திருக்காது. அல்லது தெரிந்தது மாதிரி சொல்வது நமக்கு பிரயோஜனமாக இருக்காது.,    
எனக்கும் கொஞ்சம் எழுதத் தெரியும் - 6 

90 வயது கலைஞர் 50 வயது கலைஞரை ப் போல்.......

அவசர நிலை மிசா கொடுமையை மிக உறுதியாக எதிர்த்த கலைஞரா, தம் சொந்தக் கட்சி விவகாரத்தில் இவ்வளவு தடுமாறுகிறார் என்று நண்பர் ஒருவர் கேட்டார். 90 வயது கலைஞர் 50 வயது கலைஞரப் போல் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறவர்களை யாரும் எப்போதும் எந்த வகையிலும் திருப்தி செய்ய முடியாதுதான். ஆனால் மாறி விட்ட குடும்ப உறவுகளையும், உணர் வுகளை மாற்றிக் கொண்ட இயக்கத்தின் அடுத்த கட்ட தலைவர்களையும் தவிர்த்துவிட்டு கலைஞரால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை என்பது காலம் ஏற்படுத்திய மாற்றமே அன்றி, கலைஞரிடம் ஏற்பட்ட மாற்றமன்று.    
1) 14 வயதினில் "ஓடி வந்த இந்திப்பெண்ணே கேள்;நீ தேடி வந்த கோழைகள் வாழும் நாடு இதல்லவே" என தமிழ் முழக்கம் திருவாரூரில் முழங்கியவர்...
2)
திருமண நாளன்று மணக்கோலத்தோடு இந்தி எதிர்ப்பு முழக்கம் முழங்கியவர்...
3) 20
வயதினில் "முரசொலி" பத்திரிகை கையேடு துவங்கிய பத்திரிகை ஆசிரியர்...
4)
சமஸ்கிருத வார்த்தைகளால் நிறைந்து கிடந்த தமிழ் திரையுலகில் சமூக நீதி கருத்துக்களை அழகு தமிழ் வசனம் எழுதி மொத்த மக்களையும் தன பக்கம் பார்க்க செய்த "பரா சக்தி" அவர் 
5)
தனது பேச்சாற்றலால் மாணவர்களை கெடுக்கிறார்..போராட்ட உணர்வை தூண்டுகிறாரென இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது கைது....தனிமை சிறையில் அடைப்பு -பாளையம்கோட்டையில்...
6)
மனைவி இறந்துவிட்டார் என செய்தி வந்த பின்னரும் புதுக்கோட்டை கட்சி பொதுகூட்டத்தில் குறித்தபடி பேசி முடித்து விட்டு.. பிறகு மனைவியின் சடலம் காண சென்ற இயக்கத்தின் மீது பற்று கொண்ட பற்றாளர்..
7) "
கல்லக்குடி". என ரயில் நிலைய பெயர் மாற்றம் கோரி தண்டவாளத்தில் தலை வைத்து வடஇந்திய நுழைவுக்கு சாவுமணி அடித்த சீற்றமான இளைஞர்...
8) "
இம் என்றால் சிறைவாசம்; ஏன் என்றால் வனவாசம்" என ஜனநாயகத்தின் கழுத்து நெறிக்கப்படுகிறது என்றவுடன் நெருக்கடி காலத்தில் தைரியமாக எதிர் குரல் எழுப்பிய ஜனநாயக காவலன்..
9)
பெருந்தலைவரை கைது செய்யமாட்டேன்...அதற்காக ஆட்சியையும் இழக்க தயாரென முழங்கிய வேகம்...
10)
இலங்கையில் தமிழர்களை கொன்றுவிட்டு திரும்பும் IPKF என்னும் இந்திய அமைதி படையை முதல்வர் என்னும் முறையில் வரவேற்க செல்ல மாட்டேன் என பிரதமரின் எச்சரிக்கைக்கே எச்சரிக்கை கொடுத்த அந்த இன உணர்வு...
11)
திருச்சியில் நடைபெற்ற இளைஞர் அணியின் முதல் மாநாட்டில் மாலை 5 மணிமுதல் மறுநாள் விடியற்காலை 4 மணி வரை ஒரே இடத்தில் மேடையில் அமர்ந்தபடியே ஊர்வலத்தில் சென்ற தொண்டர்களை கை அசைத்து உற்சாகப்படுத்திய அந்த ஈடுபாடு...
12)
எந்த அரசு பதவியும் வகிக்காத தந்தை பெரியாருக்கு, இறுதி மரியாதைக்கு ராணுவ அணிவகுப்பை அளித்த விவேகம்...
13)
விடுதலை நாளன்று நாட்டுக்கொடியை அம்மாநில முதல்வரே ஏற்ற வேண்டுமென போராடி பெற்ற உரிமை...
என எத்தனையோ கலைஞர் அவர்களை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்..
இப்படி அவர் தனது வாழ்நாளில் படிப்படியாக சேர்த்து வைத்த பெருமைகளையும் நற்பெயரையும் சிலர் தங்களது தவறுகளுக்காக சீரழிக்க முனைந்தால் அவர்கள் யாராக இருந்தாலும் ...
கலைஞரது குடும்பத்தினராகவே இருந்தாலும்
அவர்களுக்கு எதிராகவே நமது  பதிவுகள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறவர்களில் நானும் ஒருவன் ..


இன்னொரு செய்தியையும் இங்கே நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். கலைஞருக்குத்தான் வயது தொண்ணூறு ஆகிவிட்டது. அவரால் உறுதியாக செயல்பட முடியவில்லை என்கிறார்கள். இன்று இளம் தலைவர்களாக வலம் வருகிறர்வர்கள் எல்லோரும் மன உறுதியோடும் கொள்கை உறுதியோடும்  இருக்கிறார்களா? 
இருப்பாய் தமிழா  நெருப்பாய்  என்ற முழக்கத்தொடு கட்சி நடத்துகிற இளந்தலைவர்கள் எத்தனை அந்தர் பல்டிகளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்.  இருப்பாய் தமிழா நெருப்பாய் என்று பாடிய கவிஞர்  காசி ஆனந்தனின் வரிகளுக்கு பேராசிரியர் சுபவீ அவர்கள் ஒரு முறை அருமையான் விளக்கத்தைத் தந்தார்கள் 

இருப்பாய் தமிழா நெருப்பாய்உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனின் புகழ்பெற்ற இவ்வரி என்ன சொல்கிறது? நெருப்பாய் இருப்பது என்றால் எப்படி?
நெருப்புக்குப் பல குணங்கள் உண்டு. எனினும், சட்டென்று நினைவுக்கு வருவது, நெருப்பு சுடும் என்பதுதான். எனவே, நெருப்பாய் இரு என்றால், தமிழா நீ சூடு, சுரணை உள்ளவனாக இரு என்று பொருள். தமிழனுக்குச் சூடே கிடையாதா, அவனுக்குக் கோபமே வராதா என்று கேட்டால், அப்படிச் சொல்லிவிட முடியாது. தன் சாதியைப் பற்றி யாராவது இழிவாகக் கூறிவிட்டால், தமிழன் கோபக் கனலாகி விடுகிறான். அவனிடம் சூடு பறக்கிறது. ஆனால், நம் மொழி, இனம் பற்றி எவரேனும் இழிவாய்ப் பேசினால், நாம் ஆறிய சோறாய் அடங்கிப் போகிறோம். அங்கேதான் நெருப்பாய் இருக்க வேண்டும் என்கிறார் கவிஞர்.
நெருப்புக்கு இன்னொரு குணமும் உண்டு, தீச்சுடரை நாம் எப்படி ஏந்தினாலும் - நேராக, பக்கவாட்டில், தலைகீழாக எப்படி ஏந்தினாலும் - நெருப்பு மேல் நோக்கித்தான் எழும். தஞ்சாவூர் பொம்மையைத் தலையாட்டி பொம்மை என்று நாம் தவறாகச் சொல்கின் றோம். அது தலையாட்டி பொம்மை அன்று. எப்படி நாம் சாய்த்து வைத்தாலும், உடனே தலைநிமிர்ந்து விடுகிற தலை தாழாப் பொம்மை அது! அது நெருப்பின் குணம். எனவே, நெருப்பாய் இரு என்றால், என்றும் தலை வணங்காத சுயமரியாதைக்காரனாக இரு என்றும் பொருள்.மேலும், நெருப்பு என்றால் வெளிச்சம். அதாவது அறிவு. அறியாமை இருள் நீக்கும் அறிவு. அதனால்தான் அறிவின் அடையா ளமாய், சுடரேந்தி நிற்கும் ஒரு கையை நாம் பயன்படுத்துகிறோம்.
எனவே, இருப்பாய் தமிழா நெருப்பாய் என்று கவிஞர் ஏன் பாடினார்? தமிழர்கள் இன, மொழி உணர்வுடையவர்களாகவும், சுயமரி யாதைக்காரர்களாகவும், அறிவாளிகளாகவும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்து வதற்காகத்தான்!
(கலைஞர் தொலைக்காட்சியின் ஒன்றே சொல், நன்றே சொல் பகுதியில் - சுப.வீரபாண்டியன்)
 கலைஞரால் உறுதியாக செயல்பட முடியவில்லை என்று சொல்பவர்கள் மற்ற தலைவர்களையும் கொஞ்சம் கவனித்துவிட்டு பேசினால் நன்றாக இருக்கும்.