அடக்குமுறைக்கு அடங்க மறுப்போம் - சமீரா மீரான்
அடக்குமுறைக்கு அடங்க மறுப்போம்
மும்பையில் மக்கள் நலப் பணியாற்றும் தம்பி ஒருவர், பெரியார் இயக்கத்தைச் சேர்ந்தவர், என்னிடம் ஒரு விளக்கம் கேட்டார்.'அய்யா, நான் எங்கள் சமுதாய மக்கள் இணைந்து நடத்தும் ஒரு அமைப்பின் சார்பாகவும் மக்கள் நலப் பணிகளை செய்து வருவது உங்களுக்குத் தெரியும். சில நண்பர்கள் சாதி ஒழிப்பை வலியுறுத்திய பெரியாரின் இயக்கத்தைச் சேர்ந்த நீங்கள் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த அமைப்பில் இணைந்து செயல் படலாமா? என்று கேட்கிறார்கள். எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. ' என்றார். சாதியின் பெயரால் இயங்கும் எந்த ஒரு அமைப் பிலும் அவர் உறுப்பினாராக இல்லை. அவர் குறிப்பிட்டது தமிழ் இலக்கிய உலகின் தலைமைப் புலவன் பெயரில் அமைந்த அமைப்பு. பிறகு ஏன் கவலைப்பட வேண்டும் என்றால் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்கள்தாம் அந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கிறார்களாம். அதனால் அந்த அமைப்பை ஒரு சாதி அமைப்பாகவே மற்றவர்கள் பார்க்கிறார்களாம் . மும்பையில் பல தமிழ் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களின் பெரும்பான்மை ஆதிக்கத்தில்தான் இயங்கி வருகின்றன. இதற்க்குக் காரணம், உறவினர்கள், ஒரே ஊர்க்காரர்கள், பக்கத்து ஊர்க்காரர்கள் உதவியுடன் மும்பைக்கு வருகிறார்கள். பிறகு அதே அடிப்படையில் பொது பிரச்சினைகளில் ஒன்று கூடுகிறவர்கள் பெரும்பாலும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாகவும் அமைந்து விடுகிறார்கள். ஒவ்வொரு குறிப்பிட்ட சாதிக்காரர்களை மட்டும் உறுப்பினர்களாகக் கொண்டு சாதிகளின் பெயரால் சங்கங்கள் பல மும்பையில் இருக்கின்றன. பள்ளி, கல்லூரி, பணியிடங்களில் சாதிபெயரையும் சேர்த்து எழுதுவதை பெரும்பாலான தமிழர்கள்கடைப்பிடித்து வருகிறார்கள். அதனால் சாதிப் பெயர்கள் உச்சரிக்கப் படுவதும், சாதியின் பெயரால் தமிழர்கள் அடையாளப்படுவதும் மும்பையில் மிகச் சாதரணமாக நிகழக் கூடியவை.மும்பையில் சில தமிழர்களுக்கு ஒரு தனிப்பண்பு இருக்கிறது. அது என்ன வென்றால், தாங்களாக ஏதும் நல்லது செய்ய முன்வர மாட்டார்கள். நல்லது செய்ய யாரேனும் முன்வந்தால் அவர்களிடம் ஏதேனும் குற்றம் கண்டு விமர்சனம் செய்வார்கள். அப்படிப் பட்டவர்களை அலட்சியம் செய்வதுதான் சரியான வழி என்றாலும், தன்னுடைய மனத் தெளிவுக்காக அந்தத் தம்பி விளக்கம் கேட்டிருக்க வேண்டும்.'பெரியார் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய சமுதாய மக்களால் நடத்தப் படும் அமைப்பிலும் சேர்ந்து பணியாற்றலாமா?' என்பதுதான் அவர்களுடைய கேள்வி.'கடவுளை மறுத்த பெரியார், கோவில் அறங்காவலராக ஏன் இருந்தார்? கோவில் நுழைவுப் போராட்டத்தை ஏன் நடத்தினார்?; அனைவரும் அர்ச்சகராக வேண்டும் என்று ஏன் விரும்பினார்? ''சாதி மறுப்பை வலியுறுத்தும் இயக்கங்கள் இன்றும் சாதியின் பெயரால் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்பது ஏன்? இந்த வினாக்களுக் கான விடைகளில் உள்ள நியாயம்தான் அந்தத் தம்பியின் வினாவுக்கு விடை தேட எனக்கு உதவியது. சில செயல்களை மேலோட்டமாகப் பார்த்தால் அவை ஏற்றுக் கொண்ட கொள்கைக்கு முரணானவை போல் தோன்றும். ஆழ்ந்து சிந்தித்தால்தான் புரியும் அவை அந்தக் கொள்கை வழியில் இயக்கப் பணிகளுக்கு வலுசேர்க்கும் செயல்கள் என்று.மக்களுக்கு நன்மை தரும் பணிகளை யார் செய்தாலும், யாருக்காக செய்தாலும், அவை இன்னொரு மனிதனுக்கு தீங்கு விளைவிக்காதபணியாக இருக்குமானால் அதனைஏன் தடுக்க வேண்டும்? தடுக்க நினைக்க வேண்டும்? அமைப்பு ரீதியான சட்ட விதிகளைக் கடைபிடிக்க வேண்டாமா என்றால், அது பற்றி அந்தந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்தாம் கவலைப்பட வேண்டும். மற்றவர்களோ மக்களோ அதுபற்றி ஏன் கவலைப்படவேண்டும்.?. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைப்பதும் அவர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்ப்பதும் பெரியரிக்கத்தாரின் அரும்பணிகளில் ஒன்று.அந்த ஒடுக்கப்பட்ட சமுதாயம் எந்தசமுதாயமாக இருந்தாலும், நாம் பிறந்த சமுதாயமாகவே இருந்தாலும் அவர்களுக்காகவும் சேர்த்து குரல் கொடுப்பதும், உழைப்பதும்
நம்முடைய கடமைதான்.இதில் எந்தத் தவறும் இல்லை.இதுதான் அந்தத் தம்பிக்கு நான் சொன்ன பதில். இந்த விளக்கம் அவருக்கு எந்த அளவில் உதவியதோ தெரியாது. எனக்கு பெரும் உதவியாக அமைந்தது.
பொதுவாகவே திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்கள் சாதி சார்ந்து செயல்படுவதை இயக்கக் கொள்கையை அறிந்தவர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அப்படி ஒரு அவப் பெயர் வந்துவிடக் கூடாது என்பதாலேயே பெரியாரின் கொள்கைகளில் பற்று கொண் டவர்கள் பலர் தம் சாதியைச் சேர்ந்தவர்களின் நலனுக்காக பேசுவதையும் அவர்களு டைய தேவைகளுக்காக துணை நிற்பதையும் தவிர்த்து வருகின்றனர். இன்னும் சிலரோ தங்கள் பிள்ளைகளின் கல்விக் கூடங்களில் தங்களின் சாதியை பதிவு செய்வது கொள் கைக்கு விரோதமானது என்று கருதி அதனை தவிர்த்து விடுகின்றனர்.
ஆழமாக சிந்தித்து பார்க்கும் பொது, இத்தகைய அணுகுமுறை அறிவுப்பூர்வமானது அல்ல என்பதை நாம் உணரமுடியும் . எந்த ஒரு சிக்கலையும் பகுத்தறிவோடு அணுகும்போது தீர்வு சரியாகவே இருக்கும். பெரியாரின் சாதி மறுப்பும் , சாதி ஒழிப்பும் நமக்குள் ஏதும் ஏற்ற தாழ்வு இருக்கக் கூடாது என்பதற்காகத்தான். நம்மைவிட மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணம் எவருக்கும் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான். எவருக்கும் நான் அடிமை இல்லை; எவரும் எனக்கு அடிமையில்லை என்பதை ஒவ்வொரு மனிதனும் உணரவேண்டும் என்பதற்காகத்தான். ஆனால், தம்மிடம் வளர்ந்த மனிதேய உணர்வை நம்மிடம் வளர்த்தவர் பெரியார். அந்த மனித நேய அடிப்படையில் எந்த மனிதனுக்காகவும், அவனுடைய நேர்மை யான தேவைக்காக நிச்சயம் நாம் துணை நிற்கவேண்டும். நாம் சாதியை விரும்பாவிட்டாலும் இந்த சமூகம், அரசாங்கம், சட்டம் அனைத்தும் சாதியைக்கொண்டு நம்மை அடையாளம் காண் பதை தடுக்க முடியாது. எந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும், நம் குருதி உறவுகளின் சமுதா யமாக இருந்தாலும் சரி, அவர்களின் போராட்டத்தில் நியாயம் இருக்குமானால் அவர்களோடு இணைந்து போராடத் தயக்கம் தேவையில்லை என்பதே நம் தாழ்மையான கருத்து. இந்த இடத்தில் ஒன்றை நாம் மறந்து விடக்கூடாது. 'தம் இனத்துக்காரன் செய்தது குற்றம் என்பதை நன்கு அறிந்தும் ஒருவன் அவனை பாதுகாக்க முயல்வதுதான் மோசமான இனவெறி' என்பது முகமது நபி (ஸல்) அவர்களின் அருள்மொழி என்று இணையப் பதிவு ஒன்றில் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். எவராக இருந்தாலும் தவறுக்கு துணை போகாமல், அவர்களுடைய நியாயமான உரிமைகளுக்காக நாம் துணை நிற்கவேண்டும். அந்த வகையில்தான் இந்த நாட்டில் தமிழர்களின் உரிமைகள் மறுக்கப் படும்போதும், இசுலாமியர்களுக்கு இன்னல்கள் ஏற்படுத்தப்பட்டு, அநீதி இழைக்கப்படும்போதும், பெரியாரின் பிள்ளையாக, தி. மு. கழகத்துக் காரனாக, எந்தவித தயக்கமும் இன்றி ஓங்கி குரல் கொடுக்கும் விதமாக தொடர்ந்து எழுதி வருகிறேன்.
கல்விக் கூடங்களில் , பணியிடங்களில் நம் சாதியை பதிவு செய்யாமல் இருப்பதால் நமக்கு கிடைக்க வேண்டிய அரசின் சலுகையை நாம் இழக்கிறோம் என்பது மட்டுமல்ல, அந்த இடம் ஒரு உயர் வகுப்பைச் சேர்ந்தவருக்கு கிடைப்பதால், நம்முடைய வளர்ச்சிக்கு அதுவே தடையாகும். நூற்றாண்டு கால இடஒதுக்கீடு போராட்டம் அர்த்தமற்று போய்விடும்.
நம் சமுதாயக் கட்டமைப்பும், அரசியல் சட்ட அமைப்பும் நம்மை, நம் சாதிப்பிரிவைக் கொண்டு அடையாளம் காணுகிற நிலை தொடரும்வரை, நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சாதியைக் கொண்டு நாம் அறியப்படுவதை தவிர்க்க முடியாது. குறிப்பாக, இடஒதுக்கீட்டு உரிமை பெற்றவர்கள் சாதிப் பெயரைத் தெரிவிக்கத் தயக்கம் காட்டக் கூடாது. அதே வேளையில் சாதியின் பெயரால், மதத்தின் பெயரால், நிகழும் இழிவுகளையும், அடக்குமுறைகளையும் எந்தக் காலத்திலும் நாம் அனுமதிக்கக் கூடாது. உலகின் எந்த ஒரு மனிதரிடமும் அன்பு காட்டும் நல்லெண்ணம் மிக்க மனிதர்களாக நாம் வாழ்ந்தாலும், உலக மாந்தர் அனைவருக்கும் ஒரு குறிப்பிட்ட மொழி இருக்கிறது; அனைவரும் ஒரு குறிப்பிட்ட மரபினத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அந்த வகையில் நாம் அனைவரும் மொழியால் தமிழர்கள், இனத்தால் திராவிடர்கள் என்ற உணர்வோடு ஒன்றுபட்டு வாழ்வோம். வாழ்க தமிழ்! வளர்க திராவிடம்!!.